பொது
என் உடன்பிற(வா) சகோதரி
என் கணவருக்கு எட்டு வயது மூத்தவர் அவருடைய அக்கா சரஸ்வதி என்ற சரசா.அவர்தான் என்னுடைய உடன்பிறவா சகோதரி.என் கணவர் எங்கள் கல்யாணமான புதிசில் அதிகமாக பேச மாட்டார். (அதற்கு அப்பறம் மாறி விட்டார்) ஆங்கில நாவல்கள் படித்து கொண்டு இருப்பார்.எனக்கு பேச்சு துணைக்கு சரசா அக்கா. என்னிடம் ரொம்ப ஆசையாக இருப்பார். நானும்அவரிடம் பாசமாக இருப்பேன் நாங்கள் ஏதாவது பேசி கொண்டு இருப்போம். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் கோவிலில் வசந்தோற்சவம் நடக்கும் எனக்கு இரட்டை பின்னல் பின்னி விட்டு அவருடன் அழைத்து செல்வார்.பிரபல பாடகர்களிள் கச்சேரி நடக்கும் கேட்டு விட்டு வீடு திரும்புவோம்.
அவர் கூட பிறந்தவர்கள் என் கணவரையும் சேர்த்து நான்கு தம்பிகள்.என் கூட பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் ,ஒரு தம்பி. இருவருக்கும் சகோதரிகள் இல்லாதலால் நாங்கள் ஒருவருகொருவர் பாசத்துடன் இருப்போம்.
சரசா அக்கா அவருடைய பழைய கதைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வார் பதினைந்து வயதாக இருக்கும்போது 20 வயது வித்தியாசத்தில் இரண்டாம் தாரமாக என்னுடைய அத்திம்பேருக்கு வாழ்க்கை பட்டார்.அந்த காலங்களில் நிலபுலன்கள்,வீடு,வெள்ளி பாத்திரம்,நகைகள் என்றால் கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்கள்.அத்திம்பேருடைய அப்பா மிராசுதார். அக்கா ரொம்ப சாது மற்றும் வெகுளி.ரொம்ப பயந்த சுபாவம்.மாமியர் வீட்டில் கொடுமைகள்.15 வயது பெண்ணிற்கு சாப்பாடு கூட சரியாக கிடையாது.தன் விதியை நெந்து கொண்டு வாழ்ந்த வாழ்க்கையின் இனிய பக்கம் மணி மணியாக மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்ததுதான்.கூட்டு குடும்பம்.மாமியார்,மாமனார் கை ஓங்கிய காலம்.விடிவு காலம் அவர்கள் காலத்திற்கு பிறகு ஆரம்பித்தது.பிள்ளைகள் படித்து தலையெடுக்க ஆரம்பிக்கும் வேளையில் விதி விளையாடியது.அத்திம்பேர் அறுபதாம் கல்யாணம் முடிந்த கொஞ்ச மாதங்களில் மாரடைப்பில் காலமாகிவிட்டார்.அக்காவிற்கு 40 வயது.திடீரென்று அத்திம்பேர் போன அதிர்ச்சி தாங்க முடியவில்லை.இவ்வளவு சோகம் வாழ்க்கையில்.
சென்னையில் மகன்களுக்கு வேலை கிடைக்க அக்காவை அழைத்து சென்றார்கள்.பிள்ளைகள் கல்யாணம்,பேரன்கள், பேத்திகள் பிறக்க அக்காவிற்கு சின்ன வயதில் அனுபவிக்க முடியாததை பிள்ளைகள் நடத்தி வைத்தனர்.எங்கு வெளியில் சென்றாலும் இந்தியாவிற்குள்ளும் சரி வெளிநாடுகளுக்கும் சரி தங்கள் கூடவே அழைத்து செல்வார்கள்.மகன்கள் அக்காவை கையில் வைத்து தாங்கினார்கள்.பேரன்கள் பேத்திகள் அதிக பாசத்துடன் இருந்தார்கள். Close knit family என்பார்களே அதற்கு அவர் குடும்பம்தான் ஒரு உதாரணம்.என் குழந்தைகளும் அத்தை,அத்தை என்று பாசத்துடன் இருப்பார்கள்.
75 வயதில் அமெரிக்காவில் பெரிய பேரன் குழந்தையை பார்த்து கொள்ள வந்து ஆறு மாதம் தங்கி பார்த்து கொண்டார்கள். யார் என்ன உதவி வேண்டும் என்றாலும் உடனே செய்து விடுவார்.சமையல் செய்வது ரொம்ப பிடிக்கும்.அலுக்காமல் எண்ணெய் பட்சணங்கள் செய்து கொடுப்பது பிடிக்கும்.பேரன்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது போகும்போது சின்ன குழந்தை மாதிரி ஏர்போர்ட் சென்று வரவேற்று,வழி அனுப்புவது என்பது அவரின் வழக்கமாக இருந்தது.எல்லோருடனும் சகஜமாக பேசுவார்.அமெரிக்காவிலிருந்து திரும்பி செல்லும் போது pilot க்கு நன்றி சொல்லி அவருடன் புகைபடம் எடுத்து கொண்டார். அவருடைய 80 ம் வயது பிறந்த நாளை Zoom meeting கில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தினோம்.படுக்காமல், ஒருத்தரையும் சிரமம் படுத்தாமல் தன் கடைசி காலம் இருக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருப்பார்.
இவ்வளவ பாசமாக அனைவரிடமும் பழகியவர் கடந்த 31 தேதி யன்று மாரடைப்பால் எங்களை விட்டு பிரிந்து விட்டார்.அவருடைய மறைவு எங்களுக்கு பெரிய இழப்பு. இந்த பதிவு எழுதும்பொழுது கண்களில் கண்ணீர் பெருகியது.அன்பை தவிர வேறு எதுவும் தெரியாத என் உடன்பிறவா சகோதரி எங்களை விட்டு பிரிந்து விட்டார் என்பதை நம்ப மறுக்கிறது மனது.
அமெரிக்கா வந்தபோது அட்லாண்டாவிற்கு வந்து பத்து நாட்கள் என் சின்ன பெண் வீட்டில் தங்கி இருந்தார்.எல்லா இடமும் சுற்றி பார்த்தோம் அப்போ எடுத்த புகைபடங்கள்.அவருடன் எடுத்த படங்கள் மதுரையில் இருப்பதால் என்னால் share செய்ய முடியவில்லை.
- Padma
